பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சோலார் பைக்கை உருவாக்கி இருக்கிறார் மதுரை மாணவர். பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவது கண்கூடு. பெட்ரோலுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பைக்குகளுக்கு மாறலாம் என்றால், மின் தடை பிரச்சினை பயமுறுத்துகிறது. கடும் மின் வெட்டால், பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்து வாகனங்களை ஓட்டுவதும் சிரமமான காரியமாக இருக்கிறது. இப்படியே போனால் இதற்கு என்னதான் தீர்வு என்று யோசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறார் மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் கார்த்திக். “பெட்ரோலும் வேண்டாம்; மின்சாரமும் வேண்டாம்; சூரியன் மட்டும் போதும். உங்கள் வாகனம் ஓடும்” என்று நம்பிக்கை தருகிறார் இவர். படிப்பது தொழில் மேலாண்மை என்றாலும், இயந்திரவியலின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக சோலார் பைக்கைத் தயாரித்திருக்கிறார் இவர். “இயந்திரவியல் துறையில் படிக்கும் என் நண்பர் ஹரியுடன் இணைந்து இந்த பைக்கை உருவாக்கியிருக்கிறேன். முதல் கட்டமாக, சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக்கூடிய சோலார் பேனல்களில் சிறிது மாற்றங்களைச் செய்து வைத்துக்கொண்டேன். சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்காக தனி எலெக்ட்ரிக் டிரைவ் வீல் மற்றும் மோட்டார்களையும் வடிவமைத்தோம். ஹெட் லைட், இண்டிகேட்டர் போன்றவற்றிக்கு சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவையே பயன்படுத்தினோம். பைக்கின் பாகங்களையும், சோலார் பாகங்களையும் இணைத்து முழுமையாக வண்டி தயாரானபோது சாலையில் ஓடத் தகுதியான நிலையில் இருந்தது. வண்டியை எங்கள் கல்லூரியில் டெமோ செய்து காண்பித்தபோது பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் முன்பாக ஓட்டிக் காண்பித்தோம். எங்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்” என்று ஆர்வத்துடன் விவரிக்கிறார் கார்த்திக். “அலுவலகம் செல்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் இரு சக்கர வாகனத்தை வெயிலில் பார்க்கிங் செய்துவிட்டால் போதும். அதன் பிறகு, குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இந்த வண்டியை உருவாக்க ரூ.60 ஆயிரம் செலவாயிற்று. ஆனால், தொழில் முறையில் உருவாக்கும்போது ரூ.25 ஆயிரம் செலவில் தயாரித்து விடலாம். சோலார் பைக்கை வாங்குவது தவிர எரிபொருளுக்கென வேறு பணம் செலவழிக்கத் தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம்” என்று கூறும் கார்த்திக் இந்த பைக்கினை உருவாக்க உதவிய நண்பர் ஹரி, மெக்கானிக் முத்து ஆகியோருக்கு நன்றி கூறுகிறார். அடுத்தகட்டமாக, முற்றிலும் சோலார் மூலம் இயக்கும் வகையிலான ஆட்டோ மற்றும் கார்களை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. அதற்காக "ஸ்பான்சர்' கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003ல் தொடர்பு கொள்ளலாம் நன்றி.
எனது முதல் நன்றி நயன் சாருக்கு
No comments:
Post a Comment